ஏ.டி.எம். மையங்களில் நூதன மோசடி செய்த 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
ஏ.டி.எம். மையங்களில் நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தது. அதாவது மோசடி கும்பல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது, பணம் வெளியில் வந்து கொண்டு இருக்கும் நேரத்தில் அந்த பரிவர்த்தனையை ரத்து செய்வார்கள். அப்போது பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டாலும் பணம் வெளியே வந்துவிடும்.
இந்தநிலையில் ஏ.டி.எம்.யில் இருந்து வரும் பணத்தை எடுக்கும் கும்பல், வங்கி வாடிக்கையாளர் உதவி மையத்துக்கு போன் செய்து பேசுவார்கள். அப்போது அவர்கள், ஏ.டி.எம்.யில் பரிவர்த்தனையை ரத்து செய்த பிறகும் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக முறையிடுவார்கள்.
வங்கி ஊழியர்களும் குறிப்பிட்ட ஏ.டி.எம். பரிவர்த்தனையை சரிபார்க்கும் போது, அது ரத்து செய்யப்பட்டது தெரியவரும். எனவே வங்கி ஊழியர்கள் மோசடி கும்பலின் வங்கிக்கணக்கிற்கு அந்த தொகையை மீண்டும் அனுப்பிவிடுவார்கள். இவ்வாறு அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்த பரபரப்பு தகவல் வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து தெரியவந்த பிறகு இந்த கும்பலிடம் உஷாராக இருக்குமாறு மும்பையில் உள்ள ஏ.டி.எம். காவலாளிகளுக்கு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
மேலும் மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் கண்காணிப்பு கேமரா படங்களும் காவலாளிகளுக்கு காண்பிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த மோசடி கும்பலை சேர்ந்த 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் சயான் சர்க்கிளில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி அவர்களை அடையாளம் கண்டுகொண்டார். எனவே அவர் மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றவுடன் ஷட்டர் கதவை இழுத்து மூடினார். மேலும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்த மோசடி கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பிடிபட்ட 3 பேரும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த விஜய்குமார்(வயது26), அருண்குமார்(27), சாந்தனு சங்கர்(22) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்தேரி, பாந்திரா, கார், சாந்தாகுருஸ், தாதர், செம்பூர், சர்ச்கேட், சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
போலீசார் அவர்களிடம் இருந்து 20 ஏ.டி.எம். கார்டு, ரூ.42 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளனர்.