கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல்நசுங்கி சாவு

அகமதுநகர் அருகே கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-17 22:39 GMT
அகமதுநகர்,

அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமதுநகர்-ஜாம்கேத் சாலையில் நேற்று காலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்தனர். இந்தநிலையில் அங்குள்ள ஆஸ்திரி டவுன் பகுதியில் உள்ள போக்ரிபாடா அருகே வந்தபோது, உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் ஜாம்கேத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்களின் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சவேகர்கான் கிராமத்தை சேர்ந்த யோகேஷ் கவுசல்(வயது28), நாகேஷ் கோவிந்த்(40), அனுஜா சங்கர்(34), அனிகேத் சங்கர்(34) ஆகியோர் எனபது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவம் குறித்து ஜாம்கேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்