வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ஆம்னி பஸ்களில் பறக்கும் படையினர் சோதனை
வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ஆம்னி பஸ்களில் பறக்கும் படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்லை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் 30 பறக்கும் படைகள் மற்றும் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை ரூ.95 லட்சம் மற்றும் 2 ஆயிரம் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர அம்பை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டதை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வந்த ஆம்னி பஸ்களில் நேற்று அதிகாலையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை அருகே உள்ள தாழையூத்து சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை தாசில்தார்கள் மகாலட்சுமி, மோகன் ஆகியோர் தலைமையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆம்னி பஸ்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று தீவிர சோதனை நடத்தினர். லக்கேஜ் அறைகள் மற்றும் பஸ்சின் மேற்கூரை கேரியரில் கொண்டு செல்லப்பட்ட பார்சல்களையும் பிரித்து சோதனை நடத்தினர். இதேபோல் வெளியூர்களில் இருந்து நெல்லை வழியாக சென்ற சரக்கு வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.