நெல்லை அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு மீன்பிடிக்க சென்ற போது பரிதாபம்

நெல்லை அருகே மீன்பிடிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-03-17 21:45 GMT
மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள எட்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 8). அதே ஊரைச் சேர்ந்தவர் மற்றொரு மகாராஜன் மகன் இசக்கிமுத்து (11), மற்றும் சரவணன் (6). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

மணிகண்டன் எட்டான்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 3-ம் வகுப்பும், இசக்கிமுத்து மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் ஊருக்கு தென்புறம் ஊரணி பகுதியில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர். குளத்தில் இறங்கி நின்று மணிகண்டன், இசக்கிமுத்து ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். கரையில் சரவணன் நின்று கொண்டு இருந்தான்.

மீன்பிடித்துக் கொண்டு இருந்த 2 பேரும் குளத்தின் சகதியில் சிக்கி திடீரென்று நீரில் மூழ்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் அலறினான். அவன் ஊருக்குள் ஓடிச் சென்று இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்தான். இதை அறிந்த இருவீட்டாரும், ஊரில் உள்ளவர்களும் குளத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் 2 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் இதுபற்றி மானூர் போலீசுக்கும், பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் குளத்தில் இறங்கி 2 மாணவர்களை பிணமாக மீட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்