தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூலம் இதுவரை ரூ.11 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இதுவரை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்து உள்ளனர்.

Update: 2019-03-17 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர மாவட்டத்தின் எல்லைகளில் போலீஸ் சார்பில் 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பறக்கும் படை அதிகாரிகள் ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று வாகன தணிக்கையும் நடத்தி வருகின்றனர்.

இதுவரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரொக்கப்பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அதே போன்று ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.90 ஆயிரத்து 900 மதிப்பிலான சுடிதார் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தொடர்ந்து வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்