வேதாரண்யத்தில் அயோடின் கலக்காத உப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை

வேதாரண்யத்தில் அயோடின் கலக்காத உப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.;

Update: 2019-03-17 23:00 GMT
வேதாரண்யம்,

சர்வதேச நுகர்வோர் தினத்தையொட்டி வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தினர் ஆய்வு செய்தனர். உணவுக் கான உப்பில் அயோடின் அளவு குறித்து பரிசோதனை மேற்கொண்ட அவர்கள் அதன் மூலம் உப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பில் தூத்துக்குடி என போலியாக முகவரி குறிப்பிடப்பட்டு அயோடின் நுண்சத்து கலக்காமல் விற்பனைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த உப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலெட்சுமி உத்தரவிட்டார். மேலும் அயோடின் சேர்க்காமல் உப்புகளை விற்பனை செய்ய கூடாது. உரிமம் இன்றி பொட்டலம் போடக் கூடாது என உப்பு உற்பத்தியாளர்களை எச்சரித்தார்.

ஆய்வின்போது வேதாரண்யம் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ், வேளாங்கண்ணி பகுதி அலுவலர் ஆண்டனி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்்ச்சி மைய பொதுச் செயலர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, வேதியியலாளர் அகிலன், இயக்குனர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்