குடிசை மாற்றுவாரிய குடியிருப்பால் பாதிப்பு கட்டுமானப்பணியை நிறுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு

குடிசை மாற்றுவாரிய குடியிருப்பால் பாதிப்பு கட்டுமானப்பணியை நிறுத்தாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு கிராம மக்கள் அறிவிப்பு.

Update: 2019-03-17 22:30 GMT
பெரியபாளையம்,

பூச்சிஅத்திப்பேட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதால் பாதிப்பு ஏற்படும். எனவே கட்டுமானப்பணியை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அந்த கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ளது பூச்சி அத்திப்பேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 3,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக 1,152 வீடுகள் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணியால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் சென்னைக்கு செல்லும் குடிநீர் மாசுபடுகிறது. எனவே கட்டுமானப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 11-ந்தேதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் லதா, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இருப்பினும் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்ன வெங்கடாஜலபதி தலைமையில் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நேற்று திரண்டனர்.

பின்னர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வீடுகள்தோறும் கருப்புக்கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்