நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தர்மபுரி கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-03-17 23:00 GMT

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18–ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தல்களையொட்டி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலம், கலெக்டருமான மலர்விழி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஆதிதிராவிட நல அலுவலர் கோவிந்தன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுப்பிரமணியன், தகடூர் விஜயன், அங்குராஜ், பரமசிவம், வக்கீல் தாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:–

வேட்புமனு தாக்கல் செய்யும் போதும், பிரசாரங்கள் மேற்கொள்ளும் போதும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து விதிகளையும் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டும். விதியை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நேர்மையான முறையில் 100 சதவிகிதம் அனைவரும் வாக்களிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 வினாடிகள் பார்த்துக் கொள்ளும் வசதி வாக்குச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் 1400 வாக்காளர்களும், கிராம பகுதிகளில் 1200 வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக வாக்காளர்கள் உள்ள வாக்குசாவடிகளை பிரித்து கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்படும். பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மாரண்டஅள்ளி மற்றும் பாலக்கோடு ஆகிய இடங்களில் 3 வாக்குசாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் போது அமைக்கப்படும் பொதுக்கூட்ட மேடை, ஒளி ஒலி அமைத்தல், கொடி கட்டுதல் போன்ற பல்வேறு செலவினங்களுக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைத்து கட்சியினருக்கும் வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்காக 48 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்