தரங்கம்பாடியில், பட்டப்பகலில் வீடு புகுந்து 17 பவுன் நகைகள் திருட்டு - மர்ம மனிதன் கைவரிசை

தரங்கம்பாடியில், பட்டப்பகலில் வீடு புகுந்து 17 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-15 23:00 GMT
பொறையாறு, 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி விநாயகர் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 60). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் தற்போது வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் குணசேகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். வெளியூர் செல்வதற்கு முன்பு தனது வீட்டுச்சாவியை அங்குள்ள மின்சார பெட்டியில் வைத்து விட்டு சென்றார்.

பின்னர் அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மின்சார பெட்டியில் இருந்த சாவியை பார்த்தபோது அங்கு இல்லை. குணசேகரன் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம மனிதன், அங்கு வந்து மின்சார பெட்டியில் இருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவுகளை திறந்து வீட்டின் மேஜையில் இருந்த 17 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து குணசேகரன் பொறையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி சென்று சிறிது தூரத்தில் உள்ள கடைத்தெருவில் படுத்துக்கொண்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்