தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படையினர் வாகன சோதனை

தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-12 23:22 GMT
திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமீறல்கள் நடைபெறுகிறதா? என்று 24 மணி நேரமும் கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பறக்கும் படை குழுக்களும், 24 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் வருவாய்த் துறையினர், போலீசார், வீடியோ கேமராமேன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் தற்போது தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை புறவெளிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மூலம் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.

இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவரும் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த கார், சரக்கு வேன், சுற்றுலா வேன் போன்றவற்றை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. பெண்கள் இருக்கும் வாகனங்களில் பெண் போலீசார் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் சோதனை செய்த கார், வேன் போன்ற வாகனங்களில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும் வாகனங்களில் வந்தவர்களிடம், அனைவரும் ஜனநாயக முறையில் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டு கொண்டார்.

தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் விதிமீறல் கண்டறிய 48 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூலம் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பணம் மற்றும் பொருட்கள் சிக்கவில்லை. பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்பவர்கள் அதற்கான ஆவணங்கள் இருந்தால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்