தேர்தல் பறக்கும் படையினர் 2-வது நாளாக சோதனை: காரில் கொண்டு சென்ற ரூ.68 லட்சம் பறிமுதல் நெல்லையில் 2 ஆயிரம் சேலைகள் சிக்கின

ஆலங்குளம் அருகே நேற்று 2-வது நாளாக நடந்த வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லையில் 2 ஆயிரம் சேலைகள் சிக்கின.

Update: 2019-03-12 22:15 GMT
ஆலங்குளம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கார் மற்றும் வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே நேற்று முன்தினம் நடந்த வாகன சோதனையில் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் 2-வது நாளாக ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதி சங்கரநாராயணன், வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த பையில் சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.68 லட்சத்து 14 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

காரில் வந்தவர் பாளையங்கோட்டை சேவியர் காலனியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பதும், பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தாளாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் பணத்தை பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.68 லட்சத்து 14 ஆயிரத்தை பறிமுதல் செய்து ஆலங்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாசில்தார் கந்தப்பன் விசாரணை நடத்தி வருகிறார். உரிய ஆவணங்களை ஒப்படைத்த உடன் அந்தோணி சேவியரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு அருகே நேற்று மதியம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 2 ஆயிரம் சேலைகள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சேலைகளுக்கு உரிய ஆவணங்கள் வேனில் வந்தவர்களிடம் இல்லை.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், 2 ஆயிரம் சேலைகளையும் பறிமுதல் செய்து, நெல்லை தாலுகா அலுவலகத்துக்கு வேனுடன் கொண்டு சென்றனர். இதற்கிடையே, அந்த சேலைகள் அனைத்தும் ஒரு ஜவுளிக் கடைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் ஜவுளிக்கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அதிகாரிகள், ஆவணத்தை காட்டினால் சேலைகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்