தனுஷ்கோடி கடற்கரையில் புதைத்து வைத்த 30 கிலோ கஞ்சா சிக்கியது
இலங்கைக்கு கடத்துவதற்காக தனுஷ்கோடி கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்தனர்.;
ராமேசுவரம்,
ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று இலங்கைக்கு கடத்துவதற்காக தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் சாக்கு மூடைகள் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மூடைகளை வெளியே எடுத்து சோதனையிட்டபோது அதில் 30 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து கஞ்சா மூடைகளை இங்கு பதுக்கி வைத்தது யார், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.