எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நான்கு வழிச்சாலையாக மாறும் ஆஸ்டின்பட்டி-கரடிக்கல் ரோடு ரூ.21¼ கோடி நிதி ஒதுக்கீடு

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஆஸ்டின்பட்டி-கரடிக்கல் ரோடு நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணிக்காக ரூ.21 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-12 22:00 GMT
திருப்பரங்குன்றம், 

நாட்டின் தென் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென் தமிழகம் மற்றும் கேரள மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது. இதனால் தென் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தொடர்ந்து அரசை மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் பயனாக மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக அந்த கிராமத்தில் 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் முதற்கட்டமாக மருத்துவமனை பணிக்காக ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 750 படுக்கை வசதிகள், ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதி கொண்ட கட்டமைப்புகள் உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ஒருசில நாளிலோ அல்லது ஒரு சில வாரத்திலோ எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அடிக்கல் நாட்டி நேற்றுடன் 1½ மாதம் ஆகியும் பணி தொடங்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் பணி தொடங்குவது எப்போது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. மேலும் கட்டுமான பணி தொடங்கும் நாளை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள ஆஸ்டின்பட்டி-கரடிக்கல் 6.4 கி.மீ. தூரமுள்ள ரோட்டில் 3.5 கி.மீ. ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள ரோடு, இருவழிச்சாலையாகவும் மாற்றப்படுகிறது. இதற்காக அரசின் மத்திய சாலை நிதி திட்டத்தின்கீழ் (2018-19) ரூ.21 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்டின்பட்டி சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்த தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணியாக சாலை அமைக்கும் பணி ஒருசில நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் பணி தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்