ராமர் கோவில், காஷ்மீா் விவகாரத்தில் ‘மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருங்கள்’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்

ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க தயாராக இருக்குமாறு பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-03-12 21:45 GMT
மும்பை,

சிவசேனா கட்சி மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா அரசில் அங்கம் வகித்த போதும் கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தது. எனினும் அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தே சந்திக்கிறது. தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பின்னரும் பா.ஜனதாவை விமர்சிப்பதை அக்கட்சி நிறுத்தி கொள்ளவில்லை.

இந்தநிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

இதுவரை பிரதமர் மோடி ‘மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேசி வந்தார். ஆனால் மக்களின் மனக்குரல் என்ன என்பது மே 23-ந் தேதி (நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் நாள்) தெரியவரும்.

மக்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது என வரலாறு கூறுகிறது. பொது மக்களிடமும் கேள்விகள் இருக்கும். அதற்கான விடையை அவர்கள் வாக்கு பெட்டிகள் மூலம் பெற்று கொள்வார்கள்.

காஷ்மீாில் அமைதி ஏற்படுத்தப்படும், ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்து 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனினும் அந்த 2 வாக்குறுதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து பொது மக்கள் கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க பா.ஜனதாவினர் தயாராக இருக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பயன்பாட்டில் மக்களின் மனதில் சந்தேகம் நிலவுகிறது. தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் எல்லா நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. ஆனால் இங்கு தொடர்ந்து அதை பயன்படுத்த ஏன் வலியுறுத்தப்படுகிறது. ஒருவேளை வாக்குப்பதிவு எந்திரங்களை பண பலத்தால் கட்டுப்படுத்த முடியுமோ?.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் அது பிரதமர் மற்றும் மாநில முதல்-மந்திரிகளை தவிர எல்லோருக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்