நாட்டுக்கு மோடியின் தலைமை தேவை இனிமேல் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எஸ்.எம்.கிருஷ்ணா பேட்டி

நாட்டுக்கு மோடியின் தலைமை தேவை என்றும், இனிமேல் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.;

Update: 2019-03-12 23:15 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டுக்கு மோடியின் தலைமை தேவை. அதற்காக நான் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். நல்ல நாட்கள் வரும் என்று மோடி சொன்னார். இது உடனே வரக்கூடிய விஷயம் அல்ல. இது தொடா்ந்து நடைபெறும் விஷயம்.

நாட்டு மக்களுக்கு நல்ல நாட்களை கொண்டு வர வேண்டும் என்றால் இன்னும் சிறிது காலம் மோடி பிரதமராக இருக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி, ஆட்சி நடத்தும் பொறுப்பை ஒரு கட்சிக்கு வழங்க வேண்டும்.

கூட்டணி ஆட்சியால் நாடு வளர்ச்சி அடையாது. இதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கா்நாடக மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன. ஆட்சி அதிகார ஆசைக்காக இந்த கட்சிகள் ஆட்சியை நடத்துகின்றன. கூட்டணி ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

கூட்டணியில் கட்சிகளில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், மே மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும். எது வேண்டுமானாலும் நடக்கும்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் இல்லை. இது பா.ஜனதாவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். ராஜீவ்காந்தியிடம் அரசியல் குணம், தகுதி இருந்தது.

ஆனால் ராகுல் காந்தியிடம் அத்தகைய குணங்கள் இல்லை. அரசியல் குடும்பம் என்பதை தவிர்த்து அவரிடம் வேறு எந்த தகுதியும் இல்லை. பிரியங்கா காந்தி வருகையால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்ப அரசியலை நான் எதிர்க்கிறேன்.

குடும்ப அரசியலுக்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. தகுதி வாய்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட முடியும். குமாரசாமியின் மகன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அம்பரீஷ் இப்போது இல்லை என்பதால், அவர் ஆற்றிய சேவைகளை குறை இல்லை என்று சொல்வது தவறு.

அம்பரீசை காங்கிரசுக்கு அழைத்து வந்ததில் எனது பங்கும் உண்டு. மண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த தொகுதியில் பா.ஜனதாவின் செல்வாக்கு கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் பா.ஜனதா 2½ லட்சம் ஓட்டுகள் வாங்கியது. எங்கள் கட்சி டிக்கெட் வழங்கினாலும், நான் இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன். பெங்களூரு நகரின் வளர்ச்சியில் யாருக்கு அதிக பங்கு உள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.

சிலர் (தேவேகவுடா) மண்ணின் மகன் என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்கள். ஆனால் இந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் மண்ணின் மகன்கள் தான். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

மேலும் செய்திகள்