போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு காதல் ஜோடி உள்பட 6 பேரும் கைது

ரவுடி லட்சுமண் கொலை வழக்கில் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். மேலும் காதல் ஜோடி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-03-12 21:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 40). பிரபல ரவுடி. கடந்த 7-ந் தேதி ராஜாஜிநகர் அருகே ஆர்.ஜி.ரோட்டில் வைத்து மர்மநபர்கள் லட்சுமணை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண் விவகாரம் தொடர்பாக கொலை நடந்தது தெரியவந்தது. மேலும் வழக்கு தொடர்பாக ‘கேட்’ ராஜா (30) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி லே-அவுட் போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இதற்கிடையே, ரவுடி லட்சுமண் கொலை வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய ரவுடி ஹேமந்த் என்ற ஹேமி (32) பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹனுமகிரி கோவில் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்றனர்.

போலீசாரை பார்த்தவுடன் ஹேமந்த் தப்பித்து ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர்.

போலீஸ்காரர் ஆனந்த், ரவுடி ஹேமந்தை பிடித்தார். இதனால் கோபமடைந்த அவர் போலீஸ்காரர் ஆனந்தை அரிவாளால் தாக்கிவிட்டு ஓடினார்.

இதை பார்த்த இன்ஸ்பெக்டர் ஹரீஷ் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சரண் அடையும்படி ஹேமந்திடம் கூறினார். ஆனால் அவர் சரண் அடையாமல் இருந்ததோடு, பிடிக்க செல்லும் போலீசாரை தாக்கவும் முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் ஹரீஷ் துப்பாக்கியால் ரவுடி ஹேமந்தை நோக்கி சுட்டார். இதனால் ஹேமந்தின் காலில் குண்டு பாய்ந்தது.

இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் மீது கொலை, கொள்ளை உள்பட 6-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் லட்சுமண் கொலை வழக்கு தொடர்பாக காதல் ஜோடி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு ஞானபாரதி ஜெகஜோதி லே-அவுட்டில் வசித்து வரும் வர்ஷினி (21), அவருடைய காதலனான ஆர்.ஆர்.நகரை சேர்ந்த ரூபேஸ் (25), ஒசஹள்ளியை சேர்ந்த வருண் குமார் (24), பைரவேஸ்வரா நகரில் வசிக்கும் மதுகுமார் (26), நாகரபாவியை சேர்ந்த தேவராஜ் என்ற கரியா (24), மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோபனஹள்ளியை சேர்ந்த அலோக் (24) என்பது தெரியவந்தது.

கைதான வர்ஷினி ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரின் மகள் என்பதும், அவர் லண்டனில் படித்ததும் தெரியவந்தது. வர்ஷினியின் குடும்பத்துக்கும் ரவுடி லட்சுமணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், லண்டனில் படித்தபோது வர்ஷினிக்கு லட்சுமண் பணஉதவி செய்துள்ளார்.

இதற்கிடையே, ரூபேஸ்-வர்ஷினி காதலிக்க தொடங்கினர். இதுபற்றி அறிந்த லட்சுமண், ரூபேசை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக லட்சுமணை கொலை செய்ய ரூபேஸ் முடிவு செய்தார். இதற்கு வர்ஷினியும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து லட்சுமணை கொலை செய்ய வர்ஷினி ரூபேசுக்கு பணம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த பணத்தை பயன்படுத்தி ரூபேஸ் ரவுடிகளை கொண்டு லட்சுமணை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, வர்ஷினியின் காதலன் ரூபேஸ், மலவள்ளி தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. அன்னதாணி வீட்டில் திருட்டில் ஈடுபட்டு சிறை சென்றார். இந்த வேளையில், சிறையில் இருந்த ரவுடிகளான ‘கேட்’ ராஜா, ஹேமந்த் ஆகியோருடன் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சிறையில் இருந்தபடியே அவர்கள் 3 பேரும் சேர்ந்து லட்சுமணை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் 3 பேரும் திட்டமிட்டபடி தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து லட்சுமணை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்