காங்கேயம் அருகே நூற்பாலை அதிபரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் நடவடிக்கை

காங்கேயம் அருகே காரில் சென்ற நூற்பாலை அதிபரிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-03-12 22:45 GMT
காங்கேயம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தைவிதி முறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதற்காக அனைத்து தொகுதிகளிலும் வாகனங்களை சோதனை செய்ய தேர்தல் பறக்கும்படை, நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்து, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது காங்கேயம் சட்டமன்ற தொகுதி ஆகும். காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், வாகன சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் காங்கேயம்-தாராபுரம் சாலையில் வேளாண்மை அலுவலர் பானுப்பிரியா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். காருக்குள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.

இதையடுத்து காரை ஓட்டிவந்த பறக்கும் படையினர் விசாரித்த போது ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த நூற்பாலை அதிபர் சந்தோஷ் என்றும், பழனியில் நூற்பாலை வைத்து இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் காரில் இருந்த பணத்திற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இது குறித்து காங்கேயம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காங்கேயம் தாசில்தார் விவேகானந்தனிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டு பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்