ஒட்டன்சத்திரம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் திருடிய வாலிபர் சிக்கினார் - பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டில் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள குத்திலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. விவசாயி. நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு திருப்பதியின் குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் சுமார் 2 மணி அளவில் திருப்பதி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதுவும் ஒருசில நிமிடங்களுக்கு முன்பு நடந்தது போன்றே இருந்தது. இதனால் சுதாரித்து கொண்ட அவர், சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்தார். அனைவரும் வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக தேடினர்.
அப்போது கழிப்பறையின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை அம்பிளிக்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வேடசந்தூர் திருகம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 35) என்பதும், பூட்டை உடைத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.
மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அவர், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.