அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து வாக்காளர்களுக்கு தொகுதி வாரியாக ரூ.50 கோடி கொடுக்க முடிவு கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து வாக்காளர்களுக்கு தொகுதி வாரியாக ரூ.50 கோடி கொடுக்க தயாராக உள்ளதாக கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.;

Update: 2019-03-12 23:00 GMT
நாகர்கோவில்,

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை காலம் தாழ்ந்து அறிவிப்பதற்கான காரணமே மோடியின் பிரசார பயண நிகழ்ச்சிகள் முடிவடைய வேண்டும் என்பதற்காகத்தான். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் பணத்தின் மூலம் தேர்தலை நடத்துகிற ஒரு பண ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகத்தையே கேலி பொருளாக ஆக்குகிற செயல் இது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டும். பணப்புழக்கமே இல்லாத ஒரு தேர்தலை நடத்திக்காட்டுவோம் என்ற உறுதிமொழிதான் அது. அப்போதுதான் தமிழகத்தில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடக்கும். உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறார்கள்? மாநில அரசின் அதிகாரிகள் தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை காரில் வியாபாரிகள் எடுத்துச் செல்கிற பணம், விவசாயிகள் எடுத்துச் செல்கிற பணத்தை பிடிக்கிறார்கள். அதன்பிறகு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பணப்புழக்கம் கோடிக் கணக்கில் புரள்கிறது. வீதி, வீதியாக, வீடு, வீடாக பணம் வழங்கப்படுகிறது. எனக்குத்தெரிந்து தேர்தல் ஆணையம் இப்படி தோல்வி அடைந்தது இதற்கு முன்பு எப்போதுமே இல்லை.

இந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த பணம் ஆங்காங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பணம் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் புழங்குமானால் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும். சிறிய கட்சிகள், ஏழைக்கட்சிகள் என்ன செய்ய முடியும். எனவே இது பகல்கொள்ளை. பணப்புழக்கத்தின் காரணமாக தேர்தலில் தேர்தல் ஆணையமும், இந்திய ஜனநாயகமும்தான் தோல்வி அடைகிறது. தபால் ஓட்டுக்கு கூட ஒரு அமைச்சர் பேரம் பேசும் அளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் பணத்தின்மூலம் தான் தேர்தல் நடைபெறுகிறது என்பது உலகமே அறிந்த விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்