கிணற்றில் பாறையை உடைக்க வைத்தபோது வெடிபொருட்கள் வெடித்ததில் தொழிலாளி பரிதாப சாவு 2 பேர் படுகாயம்

சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் பாறையை உடைக்க வைத்த வெடிபொருட்கள் வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-12 22:00 GMT
ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள படத்தானூரை சேர்ந்தவர் மாதையன். விவசாயி. இவருடைய தோட்டத்தில் உள்ள கிணறு கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி வறண்டது. இதையடுத்து மாதையன் கிணற்றை ஆழப்படுத்த முடிவு செய்தார். அதன்படி கிணறு தோண்டும் பணியில் கோவிந்தாபுரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் முருகன் (வயது 30), ராஜேந்திரன்(42), சென்னகிருஷ்ணன்(43) உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முருகன், ராஜேந்திரன், சென்னகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் கம்பரசர் மூலம் கிணற்றில் பாறைகளுக்கு குழி போட்டனர். பின்னர் பாறையை உடைக்க வெடிபொருட்களை அவர்கள் வைக்க முயன்றனர். அப்போது திடீரென வெடிபொருட்கள் வெடித்து பாறைகள் சிதறியது. இதனால் கிணற்றின் மேல் பகுதியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தொழிலாளர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தனர்.

அப்போது முருகன் படுகாயம் அடைந்து கிணற்றுக்குள்ளேயே இறந்து கிடந்ததும், ராஜேந்திரன், சென்னகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வெடிபொருட்கள் வெடித்ததில் தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

மேலும் செய்திகள்