திண்டுக்கல்லில், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி சின்னங்கள் அழிக்கும் பணி மும்முரம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, திண்டுக்கல்லில் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி சின்னங்கள் அழிக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2019-03-12 23:00 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னரே திண்டுக்கல் மாவட்டத்தில், அரசியல் கட்சியினர் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் சுவர்களில் போட்டிப்போட்டு தங்களது கட்சி சின்னங்களை வரைந்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக பாலங்கள், அரசு அலுவலக சுவர்களைதான் அதிகம் ஆக்கிரமித்து சின்னங்கள் வரையப்பட்டிருந்தது. மேலும், ஆங்காங்கே அரசியல் கட்சிகள் குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தற்போது தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திண்டுக்கல் நகரில் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி சின்னங்கள் அழிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல் நகர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில், பணியாளர்கள் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், திண்டுக்கல் எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்தல் அதிகாரிகள் பூட்டிவைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதேபோல் வேடசந்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் விஜயராகவன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று பூட்டி ‘சீல்’ வைத்தனர். அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும், அம்மா உணவகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் மற்றும் கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் இருப்பதாக எதிர்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்