பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
கல்லூரி வளாகம் முன்பு திருச்செந்தூர் மெயின் ரோட்டையொட்டி மாணவ-மாணவிகள் திரண்டு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு 4-வது ஆண்டு மாணவர் அப்துல் ராசிக் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை போதாது. தூக்குத்தண்டனை விதிக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினர்.