பெயர் பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு - புதுச்சேரி நகராட்சி ஆணையர் அலுவலகம் முற்றுகை
பெயர் பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை நகராட்சி ஆணையர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. புதுவை நகரத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விளம்பர தட்டிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை நகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அப்புறப்படுத்தி வருகின்றனர். புதுவை புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், நெல்லித்தோப்பு மார்க்கெட், சாரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
உழவர்கரை நகராட்சி சார்பில் மூலக்குளம், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை 2-வது நாளாக பேனர்கள், பெயர் பலகைகள் அகற்றும் பணி நடந்தது. புதுவை அம்பேத்கர் சாலையில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. சுவர்களில் எழுதப்பட்டு இருந்த விளம்பரங்கள், வெள்ளை நிற வண்ணம் பூசி அழிக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யு. ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை கம்பன் கலையரங்கத்தில் உள்ள புதுவை நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் பெயர் பலகையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே அகற்றிய பெயர்பலகைகளை திரும்பிதர வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே நகராட்சி ஆணையர் அர்ஜூன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் ஆட்டோ டிரைவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது மற்றும் ஸ்பாட் பைன் (உடனடி அபராதம்) விதித்த பின்னர் ஓட்டுனர் உரிமத்தை வாங்கி வைத்துக்கொள்வது போன்ற அடாவடி செயல்களில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஈடுபடுவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் கூறி வந்தனர்.
அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று காலை ஏ.ஐ.டி.யு.சி. சங்க ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
ஊர்வலத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆம்பூர் சாலை வழியாக சென்று போக்குவரத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த உடன் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், முருகவேல் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆட்டோ தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.