கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவில்பட்டியில் பாலை தரையில் கொட்ட முயன்ற வக்கீல் கைது

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கோவில்பட்டியில் பாலை தரையில் கொட்ட முயன்ற வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-11 21:30 GMT
கோவில்பட்டி, 

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை தமிழக அரசு ரூ.22-க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.26-க்கும் கொள்முதல் செய்கின்றன. தற்போது கடும் வறட்சி நிலவுவதால், கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே பால் கொள்முதல் விலையை அரசு ரூ.40 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பாலை தரையில் கொட்டி, சாலைமறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி பாரதீய கிசான் சங்கத்தினர் 3 கேன்களில் மொத்தம் 120 லிட்டர் பாலை எடுத்து கொண்டு, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயலு, செயலாளர் பரமேசுவரன், பசு பாதுகாப்பு பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், தர்மராஜ் மற்றும் போலீசார், முற்றுகையிட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சாலைமறியலில் ஈடுபடக் கூடாது, பாலை தரையில் கொட்டக் கூடாது என்று அறிவுறுத்தினர்.

இதற்கு பாரதீய கிசான் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயலு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாலை தரையில் கொட்ட முயன்ற வக்கீல் ரங்கநாயலுவை போலீசார் கைது செய்தனர். அங்கு 3 கேன்களில் வைத்திருந்த பாலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்