சிவகிரி அருகே பொதுமக்கள் மீண்டும் போராட்டம்; டாஸ்மாக் கடை மூடப்பட்டது
சிவகிரி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.
சிவகிரி,
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே ராயகிரி நகரப்பஞ்சாயத்தை சேர்ந்த தெற்கு சத்திரம்- வடுகப்பட்டி நெடுஞ்சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 11 நாட்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், 2 மாத காலத்துக்குள் கடையை மூடிவிடுவோம் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த நிலையில் அரசு அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிவடைந்து டாஸ்மாக் கடை தொடர்ந்து திறக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசைவாணன் தலைமையில், சட்டமன்ற தொகுதி செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவல் அறிந்ததும் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், டாஸ்மாக் கடையை மூடுவது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரின் பரிசீலனையில் உள்ளது. எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
பின்னர் மாலை 3 மணி அளவில் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு வந்தார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படுவதாக சுற்றறிக்கையை வாசித்தார்.
பின்னர் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.