திணைக்காத்தான்வயல் கிராமத்தில் வீணாகும் குடிநீர்

திணைக்காத்தான்வயல் கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-11 22:00 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா குஞ்சங்குளம் ஊராட்சி திணைக்காத்தான்வயல் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு நம்புதாளை வரை பல்வேறு கிராமங்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள ஆழ்குழாயில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் குடிநீர் இந்த கிராமத்தில் உள்ள தரைமட்ட தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின்பு அந்த தொட்டியில் நிரம்பும் தண்ணீரை மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்படுவதால் பல கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆழ்குழாயில் இருந்து தரைமட்ட தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீரேற்றம் செய்யப்படும் நேரத்தில் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஓடுகிறது. இவ்வாறு வீணாகும் தண்ணீர் குடிநீர் குழாயின் அருகில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கால்நடைகளும், பொதுமக்களும் அசுத்தம் செய்கின்றனர். இதனால் அந்த தண்ணீர் கழிவுநீராக காட்சியளிக்கிறது.

மேலும் கழிவுநீர், குழாய்களுக்குள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தொற்று நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இதுதவிர குழாயில் உடைப்பு காரணமாக பல கிராமங்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. எனவே குழாய்கள் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் எனவும், தொற்று நோய் பரவும் அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்