கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை 7 தொகுதிகள் வரை ஒதுக்க பரிந்துரை

ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து டெல்லியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது இதில் அக்கட்சிக்கு 6 முதல் 7 தொகுதிகளை ஒதுக்க கர்நாடக தலைவர்கள் பரிந்துரை செய்தனர்.

Update: 2019-03-11 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தோ்தல் இரு கட்டமாக ஏப்ரல் மாதம் 18, 23-ந் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்கின்றன.

ஆனால் இந்த கட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் மேலிட ெபாறுப்பாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பலம் என்ன, அக்கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனை கேட்டார்.

அதற்கு கர்நாடக தலைவர்கள், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 6 முதல் 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதிலும் தற்போது காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் கூறினர்.

சித்தராமையா பேசும்போது, மைசூரு தொகுதியை எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக தேவேகவுடா போட்டியிட விரும்புவதால் பெங்களூரு வடக்கு தொகுதியை வேண்டுமானால் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கலாம் என்றும் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

ஆனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி முக்கியமாக மண்டியா, ஹாசன், துமகூரு, மைசூரு, சிக்பள்ளாப்பூர், கோலார் தொகுதிகளை கேட்கிறது. இதில் மண்டியா, ஹாசன் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளை வழங்க காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனவே மீண்டும் ஒரு முறை ஆலோசித்து முடிவு எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்