நாய்கள் துரத்தியதால் கிணற்றில் விழுந்து புள்ளிமான் சாவு - தண்ணீரைத்தேடி வந்தபோது பரிதாபம்
தண்ணீரைத்தேடி வந்தபோது நாய்கள் துரத்தியதால், கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் இறந்தது.;
அம்மாபேட்டை,
சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகத்தில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் கடந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை காப்புக்காட்டு பகுதிக்கு அடிக்கடி வருகிறது.
அங்கிருந்து இறங்கி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து தண்ணீர் தேடி சுற்றித்திரிகின்றன. அதேபோல் நேற்று காலை ஒரு புள்ளிமான் தண்ணீரை தேடி குருவரெட்டியூர் சாணாத்திக்கல்மேடு அருகே ஓடைமேடு என்ற இடத்துக்கு சென்றது.
அப்போது அந்த பகுதியில் தெருநாய்கள் புள்ளிமானை பார்த்தது. உடனே நாய்கள் குரைத்தன. இதனால் பயந்துபோன மான் அங்கிருந்து ஓடத்தொடங்கியது. அந்த மானை விடாமல் நாய்கள் துரத்தி சென்றன. இதனால் வேகமாக துள்ளி ஓடிச்சென்ற மான் சுமார் 50 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்தது.
அந்த தண்ணீரில் தத்தளித்த மான் சிறிது நேரத்தில் இறந்தது. இதைப்பார்த்த தோட்டத்து உரிமையாளர் ராமதாஸ் என்பவர் உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மானின் உடலை மீட்டனர்.
இதுபற்றி அறிந்த சென்னம்பட்டி வனச்சரகத்தினர் கால்நடை டாக்டர் மாலதியுடன் அங்கு சென்றனர். பின்னர் மானின் உடலை கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘இறந்தது சுமார் 3 வயதுடைய பெண் புள்ளிமான்’ என்றார்.
அதைத்தொடர்ந்து மானின் உடல் சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டது.