தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மீறக்கூடாது தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மீறக்கூடாது என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2019-03-11 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவ்வித மீறலும் இன்றி பின்பற்ற வேண்டும்.

சாதி, மதம், இனம், மொழி சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்துதல், பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தனி வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்தல், மத வழிபாட்டு தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தனியார் இடங்களில் முன் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நடுதல், பதாகைகள் வைத்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பரப்புரை வாசகங்கள் எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு முன் கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். பிரசாரத்தின் போது, பொது மக்களை பாதிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆகிய இடங்களை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்