பண்ருட்டியில், ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபர் கைது
பண்ருட்டியில் ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
பண்ருட்டி,
பண்ருட்டி எல்.என்.புரம் செல்லம்மாள் நகரை சேர்ந்தவர் ஜான்ஜேம்ஸ்(வயது 50). இவருடைய மனைவி விண்ணரசி(50). இருவரும் ஆசிரியர்கள். கடந்த மாதம் 22-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு இருவரும், கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
பின்னர் மறுநாள் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், சென்னை சாலையில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது தியேட்டர் முன்பு சந்தேகப்படும்படியான நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் திருமா என்கிற திருமாவளவன்(21) என்பதும், நண்பரான சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ஜான்பாஷா என்பவருடன் சேர்ந்து ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து திருமா என்கிற திருமாவளவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகை மீட்கப்பட் டது. மற்றொருவரான ஜான்பாஷா, ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் பூந்தமல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.