பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கோட்டூரில் நடந்தது

கோட்டூரில் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-11 23:00 GMT
கோட்டூர்,

5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதை போல, கோவில், மடம், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளில் விவசாயிகள் வாங்கி உள்ள பயிர்க்கடன் முழுவதையும் மத்திய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கான இழப்பீட்டு தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பரந்தாமன், ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் தங்கையன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனு வேளாண்மை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்