கரூரில் தேர்தல் நடத்தை விதி அமல்: அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கரூரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தொடங்கியது.

Update: 2019-03-11 22:45 GMT
கரூர்,

நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. இதன் காரணமாக நடத்தை விதிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, அரசு அலுவலகங்களில் உள்ள நடத்தை விதிகளுக்கு புறம்பான படங்கள், விளம்பர பலகைகள் 24 மணி நேரத்திலும், அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள விளம்பரங்கள் 48 மணி நேரத்திலும், தனியார் இடங்களில் உள்ள விளம்பரங்கள் 72 மணி நேரத்திலும் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதன் எதிரொலியாக கரூரில் நேற்று நகராட்சி பணியாளர்கள், வருவாய்துறையினர் உள்ளிட்டோர் மூலம் கரூர் லைட்அவுஸ் அமராவதி பாலம், திருக்காம்புலியூர், வடக்கு பிரதட்சணம் ரோடு உள்ளிட்ட நகரின் பொது இடங்களில் செய்யப்பட்டு இருந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் மீது, சுண்ணாம்பினை பூசி அழித்தனர்.

இதை தவிர, பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன. சில அரசியல் கட்சியினர் முன்னதாகவே வந்து தங்களது விளம்பர பதாகையை அகற்றி சென்றதையும் காண முடிந்தது. கரூர் சட்ட மன்றஉறுப்பினர் அலுவலகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டது. இதனை அறியாமல் பொதுமக்கள், கட்சியினர் உள்ளிட்டோர் அங்கு வந்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்