ரெயில்வே சிக்னல் தாமிர கம்பிகளை திருடிய தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது

திருச்சி அருகே ரெயில்வே சிக்னல் தாமிர கம்பிகளை திருடிய தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவற்றை விலைக்கு வாங்கிய கடை உரிமையாளர்களும் சிக்கினர்.

Update: 2019-03-11 22:15 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே ரெயில்வே தண்டவாளத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ரெயில்வே சிக்னல் கேபிள் வயர்கள் மற்றும் தாமிர கம்பிகள் அடிக்கடி திருட்டு போனது. இதனால் ரெயில்வே சிக்னல்கள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மர்ம நபர்கள் இதனை தொடர் கதையாக செய்து வந்தனர்.

இது தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுஜித் குமார் ராய் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், சரவணன், பன்னீர்செல்வம் மற்றும் ஏட்டுகள் கொண்ட குழுவினர் வாளாடி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கேபிள் வயர்கள் மற்றும் தாமிர கம்பிகளை திருடியது தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிரபு (வயது 29), நெ.1 டோல்கேட்டை சேர்ந்த சேட்டு (50), அவரது மகன் சுரேஷ் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் திருடிய தாமிர கம்பிகளை பழைய இரும்பு கடைகளில் விற்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதை யடுத்து அவற்றை விலைக்கு வாங்கிய கடை உரிமையாளர்களான திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த குணசேகரன் (60), நெ.1 டோல்கேட் பகுதியை சேர்ந்த முருகேசன் (50) ஆகிய 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.79 ஆயிரத்து 782 மதிப்பிலான தாமிர கம்பிகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்