கலெக்டர் அலுவலகத்துக்கு, அரை நிர்வாண கோலத்தில் தலையில் கற்களை சுமந்து மனு கொடுக்க வந்த மக்கள்
கலெக்டர் அலுவலகத்துக்கு, அரை நிர்வாண கோலத்தில் தலையில் கற்களை சுமந்து மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தாதன்புதுக் கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் வந்தனர். அவர்களில் ஆண்கள் பலர் சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் தலையில் கற்களை சுமந்தபடி வந்தனர். இதனை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர். உடனே அவர் களிடம் விசாரித்தனர்.
அப்போது, எங்கள் பகுதி மற்றும் பொம்மணங்கோட்டை, புதுக்கோட்டை, அழகுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாறைகளை தகர்க்க அதிக சக்தி கொண்ட வெடி பொருட்களை பயன்படுத்துவதால் எங்கள் வீடுகளும் சேதமடைகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் தாதன்புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஆனால் தற்போது சிலர் மீண்டும் பாறைகளை தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும் எனக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ரவிபாலன் தலைமையில் அக்கட்சியினரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்களிடம் பேசிய போலீசார், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறைதீர்க்கும் பிரிவு சார்பில் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் மனுக்களை போட்டுச்செல்லுங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.