கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து, மனுக்கள் அளிக்க வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், மனுக்களை அளிக்க வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் வந்தனர். மக்களிடம் கோரிக்கை மனுக்கள் சேகரிக்கும் வகையில் குறைதீர்க்கும் கூட்டரங்கு அருகில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி அந்த பெட்டியில் போட்டார். இதற்கிடையே காலையில் மக்கள் சிலர் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக் கூறினார்.
அப்போது அவர்களுடன் வந்த வாலிபர்கள் தங்களின் செல்போனில் போலீசார் பேசுவதை படம் பிடித்துள்ளனர்.
படம் பிடிக்கக்கூடாது என்று போலீசார் கண்டித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அந்த வாலிபர்கள் படம் பிடித்ததற்கு போலீசாரிடம் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களும் மனுக்களை, கோரிக்கை மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.