கிணற்றில் பிணமாக கிடந்த போலீஸ்காரர் சாவுக்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்
தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த போலீஸ்காரரின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து நேற்று முன்தினம் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அந்த பிணத்தின் கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
விசாரணையில், இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெரும்மன்சேரியை சேர்ந்த பந்தன் மகன் ராமர் (வயது 26) என்பதும், அவர் சென்னை மவுண்ட் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணம் மீட்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இறந்த ராமர் ஊருக்கு செல்வதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு கடந்த 6-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். ஆனால், அவருடைய சொந்த ஊருக்கு செல்லவில்லை. அவருடைய உறவினர் வீடு கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ளதால் அங்கு செல்வதற்காக தேனிக்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில், அவர் உடலில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் தெரியவில்லை என்றும், தற்கொலை செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், உடலின் உள்ளுறுப்புகள் வேதியியல் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனையை தொடர்ந்து அவருடைய பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
போலீஸ்காரர் ராமர் தற்கொலை செய்து இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? ஏன் தேனிக்கு வந்து இந்த முடிவை எடுத்தார்? என்பது போலீசாருக்கு புரியாத புதிராகவே உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ராமர் விடுமுறை எடுப்பதற்கு முன்பாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதாக கூறி புறப்பட்டு வந்துள்ளார். 7-ந்தேதி நண்பர்களிடம் செல்போனில் பேசியுள்ளார். பின்னர் அதே நாளில் அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினை இருந்ததா? அல்லது காதல், குடும்ப பிரச்சினை எதுவும் இருந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேனி பஸ் நிலையத்துக்கு 7-ந்தேதி வந்து இருக்க வேண்டும் என்பதால், அன்றைய தினம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவருடன் வேறு யாரேனும் வந்தார்களா? என்பதற்காக கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது’ என்றார்.