மண்டபம் யூனியன் வேதாளை கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்

மண்டபம் யூனியன் வேதாளை கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

Update: 2019-03-10 22:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் வேதாளை கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசியதாவது:– தமிழ்நாடு அரசு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது சுகாதார துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேதாளை பகுதி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையமானது தற்போது பொதுமக்கள் வசதிக்காக வேதாளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கும். மேலும் புதிதாக நிரந்தர கட்டிடம் கட்ட ஏதுவாக ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி வந்துசெல்ல வசதியாக இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டப்படும்.

மேலும் இதில் உள்நோயாளி, புற நோயாளி, அவசர சிகிச்சை பிரிவு, தாய்–சேய் நல சிகிச்சை உள்ளிட்ட வசதிகளும், ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக ஆய்வக வசதியும் உள்ளது. இதேபோல ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யும் நவீன எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன், துணை இயக்குனர்கள் சாதிக்அலி, ரவிச்சந்திரன், உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் சுதேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்