உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் - நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை
உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தளி,
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர வனப்பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஆயிரக்கணக்காக மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இந்த சூழலில் வனப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனவிலங்குகளின் நீராதாரங்களை ஆய்வு செய்யவும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட இடைவெளியில் நக்சல் தடுப்பு பிரிவினரும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அமராவதி வனப்பகுதிக்கு உட்பட்ட தளிஞ்சிவயல் பகுதியில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் உள்ளதாக நக்சல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நக்சல் தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு நேற்று அதிரடியாக வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இந்த வேட்டை வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் காலை முதல் மாலை வரையும் நடைபெற்றது. ஆனால் மர்ம ஆசாமிகள் நடமாட்டம் குறித்த எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லை.
அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்களிடம் நக்சல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வனத்துறையினருக்கு தெரியாமல் வெளியூரைச் சேர்ந்த இளைஞர்கள் மலையேற்ற பயிற்சிக்கு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து மலைவாழ் மக்களிடம் பேசிய அதிகாரிகள் சந்தேகப்படும்படியாக மர்ம ஆசாமிகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கோ அல்லது நக்சல் தடுப்பு பிரிவினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்கள். அத்துடன் வனப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வனத்துறைக்கு அதிகாரிகள் உத்திரவிட்டனர். மேலும் மர்ம ஆசாமிகள் நடமாட்டத்தால் வனப்பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.