விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்; உறவினர்கள் தர்ணா

விபத்தில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-10 22:45 GMT
திருப்பூர்,

வெள்ளகோவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது38). இவர் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளகோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று, இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜசேகரன் படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் பரிதாபமாக இறந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய போலீசார் அங்கு வராததால் நேற்று மாலை வரை அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாரிடம் அவருடைய உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகரனின் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் கூடினார்கள்.

பின்னர் போலீசாரை கண்டித்தும், உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க கோரியும், ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்