மத்தூர் பகுதியில் பூத்து குலுங்கும் மாமரங்கள்

மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் மாமரங்கள் பூத்து குலுங்குகின்றன.;

Update: 2019-03-10 22:00 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், போச்சம்பள்ளி, சாமல்பட்டி பகுதியில் சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோத்தாபுரி, நீலம், செந்தூரா, மல்கோவா உள்ளிட்ட மாவகைகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழுவதுமாக பொய்த்து போனாலும் மாமரங்களில் நன்றாக பூ பூத்துள்ளன. இதனால் மா உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மா சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு இருந்தும், மாந்தோப்புகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து மாங்கூழ் தொழிற்சாலைக்கு அனுப்பும் குத்தகைதாரர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை பேசி 3 வருடம், 2 வருடம், ஒரு வருடத்திற்கு என ஒப்பந்தம் போடுவார்கள். பின்னர் மாந்தோப்பு பராமரிப்பு பணிகளை வியாபாரிகளே மேற்கொள்வதும் வழக்கம். ஆனால் மா மரங்கள் நன்றாக பூ பூத்திருந்தும் குத்தகைதாரர்கள் ஒப்பந்தம் போட வராதது விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

பொதுவாக தோத்தாபுரி முதல் பெங்களூரா வகை மாந்தோப்புகளில் பராமரிப்பு, அறுவடை, விற்பனை விலையிலான செலவினங்களுக்கு ஒரு டன் மாம்பழம் ரூ.20 ஆயிரம் விற்றால் மட்டுமே லாபம் கிடைக்கும். சென்ற ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்ததால் டன்னுக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே விற்றது.

இதனால் குத்தகைதாரர்கள் மாந்தோப்புகளில் பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் விவசாயிகள் தாங்களே அறுவடை செய்து விற்க முயன்றாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மா விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மத்தூர், பர்கூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஒன்றியங்களில் அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை மூலம் மா கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும், ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் மாங்கூழ் தொழிற்சாலைகள் அமைத்து விவசாயிகளின் விளைச்சல் முழுவதையும் வாங்குமாறு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்