போதையில் கலாட்டா தட்டிக்கேட்ட சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிய ராணுவ வீரர் கைது
ஆவடியில் குடிபோதையில் கலாட்டா செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை ராணுவ வீரர் தாக்கினார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
ஆவடி சங்கர் நகரைச் சேர்ந்தவர் சின்னகேசவன் (வயது 57). ஆவடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ரோந்து வாகனத்தில் டிரைவர் இளங்கோவுடன் ஆவடி பகுதியில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஆவடி குளக்கரை சாலையில் நள்ளிரவில் திறந்து இருந்த ஒரு டீக்கடை மற்றும் டிபன் கடையை மூடுமாறு சப்–இன்ஸ்பெக்டர் சொல்ல சென்றார்.
அப்போது அந்த கடையில் குடிபோதையில் ஒரு வாலிபர் கலாட்டா செய்து கொண்டிருந்தார். ஏன் இங்கு கலாட்டா செய்து கொண்டிருக்கிறாய்? என்று சின்னகேசவன் கேட்டார். அதற்கு அந்த நபர் நான் யார் தெரியுமா? நானும் போலீஸ் தான் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் சப்–இன்ஸ்பெக்டர் சின்னகேசவனின் வலது கண் புருவத்தில் கையால் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து ஆவடி போலீசில் சின்னகேசவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து, சப்–இன்ஸ்பெக்டரை தாக்கிய நபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கியவர் ஆவடி காமராஜர் நகர் ஆத்தோர தெருவை சேர்ந்த செல்வம் (30) என்பதும், இவர் ஆவடியில் உள்ள மத்திய சிறப்பு காவல் படையில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து ராணுவ வீரர் செல்வத்தை போலீசார் கைது செய்து, பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தார்.