திருவேற்காட்டில் பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

திருவேற்காட்டில், பட்டப்பகலில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2019-03-10 22:00 GMT

பூந்தமல்லி,

திருவேற்காடு கே.பி.எஸ். நகர் 4–வது தெருவில் வசித்து வருபவர் கணேசன்(வயது 40). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். தனக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வசித்து வருகிறார். தரை தளத்தில் உள்ள வீட்டில் தனியார் நிறுவன ஊழியரான அழகுசுந்தரம்(34) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

அந்த தெருவில் உள்ள ஒரு கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதனால் தெருவில் உள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டனர்.

பின்னர் கணேசன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அழகுசுந்தரம் மற்றும் மாடியில் உள்ள தனது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அழகு சுந்தரம் வீட்டில் இருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சமும், கணேசன் வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

கணேசன், அழகுசுந்தரம் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்