ஊட்டியில், போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.
பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.