வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 400 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்
வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாத 400 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதத்தின் இறுதி தேதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பேரூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், வால்பாறை வட்டாரத்தை சேர்ந்த 400 ஆசிரியர்களுக்கு இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பளம் கிடைக்காத ஆசிரியர்கள் கூறியதாவது:-
ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த ஜனவரி மாதத்துக்கான சம்பளம் தாமதமாகவே கிடைத்தது. இதேபோன்று தற்போது பிப்ரவரி மாதத்துக்கான சம்பளமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் மாதந்தோறும் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாத நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை. அத்துடன் வீட்டு செலவுக்கும் பணம் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, தொண்டாமுத்தூர், வால்பாறை வட்டார பகுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஓராண்டுக்கான வருமானவரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒரு சில ஆசிரியர்களுக்கு வருமான வரி அதிகளவு தொகை பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதனால் தான் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இது சரிசெய்யப்பட்டு உள்ளது. எனவே நாளை (இன்று) ஆசிரியர்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.