கிணத்துக்கடவு அருகே, மின்கசிவால் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பரவியது - கரும்புகை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி

கிணத்துக்கடவு அருகே மின்கசிவின் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பரவியது. இதனால் அப்பகுதியில் கரும் புகை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2019-03-10 22:45 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருந்து கக்கடவு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட கழிவுபொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் இங்குள்ள மின்கம்பத்தில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு அருகே இருந்த தென்னை மரத்தில் தீபிடித்தது.

சிறிது நேரத்தில் அங்கு குவித்து வைக்கப்பட்டிந்த ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ரப்பர் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் தீ அணையாமல் தொடர்ந்து எரிந்ததால் அப்பகுதியில் கடும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனைதொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் மீது மணல் போட்டு மூடினார்கள். 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்