மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம்

மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-03-10 23:00 GMT
கீழப்பழுவூர்,

மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து மழைக்காலங்களில் வரும் உபரி நீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர் செல்லும் வகையில் அமைத்துத்தர கோரி அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மணியன் ஆகியோர் ஒன்றிணைந்து அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வெங்கனூர் கிராமத்தில் காலனி தெரு அருகே உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கீழே இறங்கி வருமாறு அழைத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் தொடர்ந்து கோபுரத்தில் நின்றபடியே பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு தாசில்தார் கதிரவன் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வந்தனர். தாசில்தார் கதிரவன் அவர்களிடம் கீழே இறங்கிவந்து உங்களின் கோரிக்கைகளை கூறுங்கள் அவை குறித்து மேலதிகாரிகளிடம் கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் கீழே இறங்கி வந்தனர். பின்னர் அவர்கள் தாசில்தாரிடம் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்