1,200 மையங்கள் மூலம் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து விடுபட்டவர்களுக்கு இன்று வழங்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,200 மையங்கள் மூலம் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று(திங்கட்கிழமை) சொட்டு மருந்து வழங்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதற்காக 1,200 மையங்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுக்கும் வகையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 41 ஆயிரத்து 24 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1200 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த வகையில் நேற்று 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று(திங்கட்கிழமை) சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 92 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 446 குழந்தைகளுக்கு 124 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் 538 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள், குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படும் சொட்டு மருந்தை தவறாது தங்களது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். சொட்டு மருந்து கொடுத்தல் குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெயமேரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமிராஜா, மருத்துவ அலுவலர் ஜெயசெல்விதேவகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா வீடு அருகிலுள்ள மையத்தில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.
கோவில்பட்டி நகரசபையில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம், ரெயில் நிலையம், சமுதாய கூடங்கள் உள்பட 36 இடங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கசிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலையில் கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட முகாமில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி இளங்கோ, டாக்டர் உமாசெல்வி, ரோட்டரி சங்க தலைவர் பாபு, மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், மாவட்ட துணை ஆளுனர் டாக்டர் சம்பத்குமார், ரோட்டரி செயலாளர் ரவிமாணிக்கம், சீனிவாசன், வீராசாமி, முத்துமுருகன், பரமேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகரசபை ஆணையாளர் அச்சையா கூறியதாவது:- கோவில்பட்டி நகரசபையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 46 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு போலியோ வழங்கப்பட்டு உள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்கு நகரசபை சுகாதார பிரிவு ஊழியர்கள் செவிலியர்கள், வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.