செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடந்ததால் ரெயில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சோகம் போலீஸ் விசாரணையில் தகவல்

சேலத்தில் செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடந்ததால் ரெயில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2019-03-10 22:30 GMT

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ஸ்ரீநாத் (வயது 22). இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8–ந் தேதி கல்லூரிக்கு சென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெற்றோர் செல்போனில் பேசியபோது, கல்லூரியில் இருந்து கிளம்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை பொன்னம்மாபேட்டை அருகே உள்ள ரெயில் தண்டவாளம் பகுதியில் ஸ்ரீநாத் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் ஸ்ரீநாத் பிணமாக கிடந்ததால் அவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து பிணத்தை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற குழப்பம் நிலவியது. இதனால் அவரது சாவில் மர்மம் நீடித்தது.

இதையடுத்து சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஸ்ரீநாத் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், என்ஜினீயரிங் மாணவர் ஸ்ரீநாத் செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடந்தபோது, ரெயில்மோதி இறந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், கல்லூரி மாணவர் ஸ்ரீநாத், அதே கல்லூரியில் பகுதிநேரமாக வேலை செய்து வந்துள்ளார். அவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு வெளியே வந்தபோது, கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் காரில் போகலாம் என அழைத்துள்ளார். அதற்கு ஸ்ரீநாத், நான் காரில் வரவில்லை. நீங்கள் செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீநாத் தனது செல்போனை பார்த்தபடி கல்லூரியின் அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க நடந்து சென்றது வரை அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது, அந்த வழியாக சேலம்–விருத்தாசலம் ரெயில் கடந்துள்ளது. இந்த விவரம் அருகில் உள்ள ரெயில்வே கேட் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி பலியாகி உள்ளார் என தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மாணவர் ஸ்ரீநாத், ரெயில் மோதி தான் இறந்திருக்கிறார் என டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள், என்றனர்.

மேலும் செய்திகள்