பழனி கோவிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அறநிலையத்துறை ஆணையர் தகவல்

பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனிந்தரரெட்டி தெரிவித்தார்.

Update: 2019-03-09 23:40 GMT
பழனி,

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனிந்தரரெட்டி நேற்று காலை பழனிக்கு வருகை தந்தார். அவரை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ரோப்கார் மூலம் அவர் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி நிலையம் வந்தார்.

பின்னர் 2-வது ரோப்கார் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவில் பொறியாளர்கள் சக்திவேல், நாச்சிமுத்து ஆகியோர் 2-வது ரோப்கார் நிலைய திட்டவரைபடத்தை வழங்கினர். அதனை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கோவில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது என்பது பற்றி கேள்வி எழுப்பினர். அதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கூடாது என்று எண்ணம் கிடையாது. காலிப்பணியிடங்கள் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவிக்கும்போது அந்த பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு கோவில்களிலும் அதன் தரத்தை பொறுத்து ஒவ்வொரு பதவிகளின் நிலையும் மாறுபடுவதால் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்குவதில் சில முரண்பாடுகள் உள்ளது. இதுகுறித்து 2 வார காலத்தில் அறிக்கை தயார் செய்யப்படும். பின்னர் அவற்றை சமர்ப்பித்து விரைவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து புதிதாக அமையவிருக்கும் 2-வது ரோப்காரில் கூடுதலாக சில வசதிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, அதற்குரிய திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. வெகுவிரைவில் ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும் பழனி கோவில் கும்பாபிஷேக பணிகளும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்