போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலரின் வெற்றி செல்லாது கோர்ட்டு அதிரடி உத்தரவு
மாநகராட்சி தேர்தலின் போது போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலரின் வெற்றி செல்லாது என கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
மாநகராட்சி தேர்தலின் போது போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலரின் வெற்றி செல்லாது என கோர்ட்டு உத்தரவிட்டது.
சிவசேனா கவுன்சிலர்
மும்பை மாநகராட்சிக்கு கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாந்திரா கிழக்கில் உள்ள 91-வது வார்டில் சிவசேனாவை சேர்ந்த சகுன் நாயக் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்.
இந்தநிலையில், அந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது, அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் முகமது ரபிக் முஸ்தபா ஹூசைன் கூறினார்.
எனவே அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி முகமது ரபிக் முஸ்தபா ஹூசைன் மும்பை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாவட்ட சாதி சான்றிதழ் கண்காணிப்பு குழுவுக்கு இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
வெற்றி செல்லாது
மாவட்ட சாதி கண்காணிப்புக்குழு நடத்திய விசாரணையில், சகுன் நாயக் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது உறுதியானது.
இந்தநிலையில், முகமது ரபிக் முஸ்தபா ஹூசைன் தன்னை அந்த வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டி ஸ்மால் காசஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நிறைவில், கோர்ட்டு சிவசேனா கவுன்சிலர் சகுன் நாயக்கின் வெற்றி செல்லாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், அந்த வார்டில் 2-வது இடம் பிடித்த முகமது ரபிக் முஸ்தபா ஹூசைன் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக தீர்ப்பு கூறியது.